வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண் கூட்டு பலாத்காரம்... தவெக நிர்வாகிகள் கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த இரண்டு உள்ளூர் நிர்வாகிகள் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தவெக நிர்வாகிகள் இருவர் அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பயணத்தின் போது, அப்பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் மயங்கிய நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில், இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இதுகுறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
