சாலையின் குறுக்கே ஓடிய சிறுமி - அசுர வேகத்தில் மோதிய பைக்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

 
சிறுமி விபத்து

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், தாயுடன் நடந்து சென்ற சிறுமி ஒருவர் திடீரெனச் சாலையின் குறுக்கே ஓடியபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மலப்புரம் மாவட்டத்தின் முக்கியச் சாலைப் பகுதியில் தாய் ஒருவர் தனது சிறு மகளை அழைத்துக் கொண்டு பாதசாரிகள் நடக்கும் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமி, தாயின் கையை உதறிவிட்டுத் திடீரெனச் சாலையின் மறுபுறத்திற்கு அசுர வேகத்தில் ஓடியுள்ளார். அதே விநாடியில் அந்தச் சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, சாலையின் குறுக்கே வந்த சிறுமி மீது பலத்த வேகத்துடன் மோதியது. இதில் அந்தச் சிறுமி தூக்கி வீசப்பட்டுச் சாலையில் விழுந்தார். விபத்து நடந்த அடுத்த கணமே அதிர்ச்சியடைந்த தாயும், அங்கிருந்த பொதுமக்களும் அலறியடித்தபடி ஓடிவந்து சிறுமியை மீட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த அந்தச் சிறுமி, உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு அருகில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்குச் சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை உரைய வைத்துள்ளது.

பிஸியான சாலைகளில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பெற்றோர்கள் எவ்வளவு விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. குழந்தைகளைக் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்வதோடு, சாலை விதிகள் குறித்த ஆரம்பகட்ட விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.