6 வருஷமா காதலிச்சுட்டு கல்யாணத்துக்கு மறுத்த காதலி... இளம்பெண்ணை வெறித்தனமாய் கத்தியால் குத்திய காதலன்!

 
காதல் கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் 6 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டுத் திருமணம் செய்ய மறுத்த காதலியை, ஏ.சி. மெக்கானிக் ஒருவர் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சின்னபுறங்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (25). சென்னையில் ஏ.சி. மெக்கானிக்காகப் பணிபுரிந்து வரும் இவர், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரை கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

கள்ளக்காதல்

இவர்களது காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டாக அந்தப் பெண் சந்தோஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

நேற்று மதிய வேளையில் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் அந்தப் பெண் பணியில் இருந்தபோது அங்கு வந்த சந்தோஷ், 6 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு இப்போது திருமணம் செய்ய மறுப்பது ஏன் என்றும், ஏன் பேசுவதை நிறுத்தினீர்கள் என்றும் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளம்பெண்ணைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவரது கழுத்து, கை மற்றும் உடல் பகுதிகளில் 6 இடங்களில் வெட்டு விழுந்தது.

கத்திக்குத்து

வாலிபரின் தாக்குதலால் வலி தாங்காமல் அலறிய பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அங்கிருந்து தப்பியோட முயன்ற சந்தோஷைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, அவரிடமிருந்த கத்தியைப் பறிமுதல் செய்தனர். மேலும், படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டுச் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சந்தோஷைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.