வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமான நிலையில், ஆற்றில் சடலமாக மீட்பு - தென்காசியில் பெரும் துயரம்!
தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் பகுதியில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரெனக் காணாமல் போன 3 வயது சிறுமி, அருகிலுள்ள ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் கூட்டுறவு வங்கித் தெருவைச் சேர்ந்தவர் ரசூல்மைதீன். இவருடைய 3 வயது மகள் அஹமது ஹாஜிரா, நேற்று மாலையில் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். திடீரெனச் சிறுமி மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து உடனடியாகக் கடையம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், உள்ளூர் பொதுமக்களுடன் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதல் பணியின் போது, வீட்டின் அருகேயுள்ள ராமநதி ஆற்றில் சிறுமி அஹமது ஹாஜிராவின் உடல் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சிறுமியின் உடலை மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கண்ணீரை வரவழைத்துள்ளது. இச்சம்பவம் குறித்துக் கடையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குழந்தை தவறி விழுந்து விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
