“ஒரு வருடம் நேரம் கொடுங்க... தவறாக ஆட்சி செய்தால் ஆட்சியே கவிழும்” - அண்ணாமலை பேச்சு!

 
அண்ணாமலை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜ மூத்த தலைவர் அண்ணாமலை, புதிய அரசுக்குச் செயல்பட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், தவறுகள் நடக்கும்போது சுட்டிக்காட்டிச் சீர்திருத்த வலியுறுத்துவதே சரியான அரசியல் என்றும் தெரிவித்துள்ளார்.

"பல ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. மக்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, புதிய அரசுக்குச் செயல்பட ஒரு வருடம் அவகாசம் கொடுப்போம். தவறாக ஆட்சி செய்தால் அதுதானாகவே கவிழும். அவர்கள் வேலை செய்யட்டும், ஏன் காலில் வெந்நீரை ஊற்றியது போல அவசரப்படுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை

தவறுகள் செய்யும்போது சுட்டிக்காட்டுவதும், அதை அரசு திருத்திக்கொள்ளும்போது பாராட்டுவதும்தான் முறையான அரசியல். அதை விடுத்து, எப்படியாவது ஆளுங்கட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் நினைப்பது தவறான அணுகுமுறை.

"ஆப்ரேஷன் மேகாலயா" போன்ற பெயர்களில் எம்.எல்.ஏ-க்களைப் பிடித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்கத் துடிப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும் சாடினார்.

தவெக அரசு சேமித்துள்ள ரூ.15,000 கோடி நிதியை நீர் மேலாண்மை, கல்வி, கிராமப்புற வளர்ச்சி ஆகிய 3 முக்கியத் துறைகளுக்கும் தலா ரூ.5,000 கோடி வீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

சேவை மனப்பான்மையோடு வருபவர்களால் மட்டுமே அடிப்படை அரசியலை மாற்ற முடியும் என்றும், மக்களின் நலனுக்காகச் செயல்படும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.