“வீடு வீடாகச் செல்லுங்கள்.. மாற்றத்தைப் புரிய வையுங்கள்!” - தவெக தொண்டர்களுக்கு விஜய் உருக்கமான வேண்டுகோள்!

 
தமிழகம் தேர்தல் விஜய் தமிழகம் தேர்தல் விஜய்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது 'நெஞ்சில் குடியிருக்கும்' தோழர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார். "உண்மையான மக்களாட்சியை அமைப்போம்" என்கிற முழக்கத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, தவெக தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தைப் பாய்ச்சியுள்ளது.

தேர்தல் நாள் நெருங்குவதை ஒட்டி, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த பத்து நாட்களும் காலை, மாலை என இரு வேளையும் உங்கள் பகுதியில் உள்ள மக்களை வீடு வீடாகச் சென்று நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு 'விசில்' சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்பு வேண்டுகோள் வையுங்கள்."

தவெக விஜய்

கட்சிப் பொறுப்பாளர்கள் மட்டுமின்றி, என் மீது பேரன்பு கொண்ட நண்பா, நண்பிகள் (ரசிகர்கள்) அனைவரும் இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டும். இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கானதல்ல என்பதைத் தொண்டர்கள் மக்களிடம் விளக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்:

"இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை மக்களுக்கு விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்."

மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தன்முனைப்பற்ற (சுயநலமற்ற) தோழமை உணர்வோடு அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

விஜய்

"ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!" எனத் தனது அறிக்கையை விஜய் உற்சாகத்துடன் நிறைவு செய்துள்ளார்.

விஜய்யின் இந்தத் திடீர் அறிக்கை மற்றும் 'வீடு வீடாகச் செல்லும்' வியூகம், மற்ற அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'விசில்' சத்தம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கத் தொண்டர்கள் இப்போதே களத்தில் குதித்து விட்டனர்.