திருமண வாழ்க்கைக்கும் இனி படிப்பு! கோவா கல்லூரியின் புதிய சான்றிதழ் படிப்பு
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நீண்ட காலம் நீடித்தும் அமைய என்ன செய்ய வேண்டும் என்பதை இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வகையில் கோவாவில் உள்ள கல்லூரி ஒன்று புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவா மனையியல் கல்லூரியின் மனித மேம்பாடு மற்றும் குடும்ப ஆய்வுகள் துறை சார்பில் ‘Marriage Readiness: Preparing for Healthy and Lasting Relationships’ என்ற பெயரில் இந்தப் படிப்பு நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 2 முதல் 17-ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில், திருமண உறவைப் புரிந்துகொள்வது, துணையுடன் இணக்கமாக வாழ்வது, பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட அம்சங்கள் கற்பிக்கப்படும்.
டேட்டிங்கின் நோக்கம், சுய விழிப்புணர்வு, ஆண்மை மற்றும் பெண்மை உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கம், திருமண விழாவுக்கும் திருமண வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு போன்ற தலைப்புகளும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இளங்கலை, முதுகலை மாணவர்கள், திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமான உறவை உருவாக்க விரும்பும் அனைவரும் இதில் பங்கேற்கலாம் எனக் கல்லூரி முதல்வர் மகேஷ் பாய் தெரிவித்துள்ளார்.
கோவாவில் 2022 முதல் 2025 வரை திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக 3,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முயற்சி அறிமுகமாகியுள்ளது.
