தங்கம், வெள்ளி விலையில் பெரிய வீழ்ச்சி... ஒரே நாளில் ரூ.10,000 சரிந்தது!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சாமானிய மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து வரும் சூழலில், இன்று வெள்ளி விலையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சரிவடைந்து வரும் அதே வேளையில், இன்று சனிக்கிழமை காலை வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கு விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கிராம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியின் காரணமாக, தொழிற்துறையிலும் முதலீட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கும் கட்டிய வெள்ளியின் விலை பாதாளத்தை நோக்கிச் சரிந்துள்ளது. நேற்று வரை விற்கப்பட்ட விலையிலிருந்து இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளியின் விலை சற்றும் எதிர்பாராத விதமாக 10,000 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த அதிரடிச் சரிவால், தற்போது ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையில் நிலவி வரும் இந்தத் தொடர் சரிவு, சுபகாரியங்களுக்கு நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 1,840 ரூபாய் குறைந்த சில மணி நேரங்களிலேயே, வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 10,000 ரூபாய் சரிந்திருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே மிகுந்த மனநிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
