குப்பை வண்டியில் விழுந்த தங்க நகை மீட்பு... தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பாராட்டு!
தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முத்துமாலை என்ற மூதாட்டி, தனது பகுதியில் வழக்கம் போல் வரும் குப்பை வண்டியில் வீட்டில் உள்ள கழிவுகளைக் கொட்டியுள்ளார். குப்பையைக் கொட்டி முடித்த சில நிமிடங்களில், தனது இடுப்பில் வைத்திருந்த மணிபர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த பணப்பையின் உள்ளே 5 சவரன் எடையுள்ள தங்க செயின் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
கழிவுகளோடு சேர்த்து தவறுதலாக குப்பை வண்டியிலேயே கொட்டியிருக்கலாம் என சந்தேகமடைந்த மூதாட்டி, உடனடியாக மாநகராட்சி நுண் உர மையத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் விபரத்தைக் கூறினார். அதிர்ஷ்டவசமாக அண்ணாநகர் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அதுவரை வண்டியிலேயே இருந்ததால், குப்பை வாகன ஓட்டுநர் இசக்கிராஜா மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முனீஸ்வரி, ராணி, பொன்செல்வி ஆகியோர் குப்பைகளைக் கொட்டி தேடத் தொடங்கினர்.
அப்போது வாழை இலைக் கழிவுகளுக்கு மத்தியில் 5 சவரன் தங்க நகையுடன் இருந்த மணிபர்ஸ் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டு மூதாட்டியிடம் நேர்மையுடன் ஒப்படைக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்களின் இந்த நேர்மையைப் பாராட்டும் விதமாக, அவர்களை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா ஆகியோர் சால்வை அணிவித்து, தங்களது சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினர்.
