ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம்... தென்கொரிய கோல்ப் வீரர் டாம் கிம்மிற்கு கட்டாய ராணுவப் பணியிலிருந்து விலக்கு!
தென்கொரியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று நாட்டின் பெருமையை உலக அரங்கிற்கு உயர்த்தியதற்காக, பிரபல கோல்ப் வீரர் டாம் கிம்மிற்கு அந்நாட்டு அரசு கட்டாய ராணுவப் பணியிலிருந்து சிறப்பு விலக்கு அளித்துள்ளது.
தென்கொரியாவின் கடுமையான சட்டத்தின்படி, 28 வயதுக்குட்பட்ட உடல் தகுதியுள்ள அனைத்து ஆண்களும் 18 முதல் 21 மாதங்கள் வரை கட்டாயமாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது விதியாகும்.
1973-ல் கொண்டு வரப்பட்ட ராணுவ சேவை சட்டத்தின்படி, ஒலிம்பிக்கில் பதக்கம் அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று நாட்டின் புகழைப் பரப்பும் வீரர்களுக்கு மட்டுமே இந்த கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாம் கிம் இந்தச் சிறப்புச் சலுகையைப் பெற்றுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தென்கொரியாவின் 'பி.டி.எஸ்' பாப் இசைக்குழுவினர் நாட்டின் பெருமையை உச்சத்திற்குக் கொண்டு சென்ற போதிலும், அவர்களுக்கு அந்நாட்டு அரசு ராணுவ சேவையில் இருந்து முழு விலக்கு அளிக்கவில்லை. மாறாக அவர்களது சேவையை 30 வயது வரை தள்ளிவைக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், 7 உறுப்பினர்களும் தங்களது 18 மாதக் கட்டாய ராணுவப் பணியை முழுமையாக நிறைவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான ராணுவச் சட்டவிதிகளுக்கு நடுவே, கோல்ப் வீரர் டாம் கிம் ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் இந்த அரிய விலக்கைப் பெற்றுள்ளது விளையாட்டு வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
