திருப்பதி ஏழுமலையானுக்கு 753 கிராம் எடையில் தங்க ஆபரணங்கள் காணிக்கை!
திருப்பதி ஏழுமலையானுக்குப் பெங்களூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த எம். மகாதேவம்மா என்ற பக்தர், ஏழுமலையான் மீதுள்ள பக்தியால் இந்த விலையுயர்ந்த காணிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். மொத்தம் 753 கிராம் எடையுள்ள 7 தங்க ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 94 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.

திருப்பதி கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் முத்தாடா ரவிச்சந்திரா மற்றும் கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் இந்தப் பொன் நகைகளைப் பக்தரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், உண்டியல் காணிக்கை மட்டுமே நாளொன்றுக்குச் சராசரியாக 3 முதல் 4 கோடி ரூபாய் வரை வசூலாவது குறிப்பிடத்தக்கது. விடுமுறை தினமான இன்று பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகமாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
