தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு: ஒரு சவரன் ரூ.91,720-க்கு விற்பனை - மேலும் குறையுமா? நிபுணர்களின் கருத்து!

 
தங்கம்

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 21) சவரனுக்கு மேலும் ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் தங்கம் விலை, கடந்த 16 நாட்களில் மட்டும் ரூ.15,000-க்கும் மேல் குறைந்திருப்பது நகை வாங்கக் காத்திருந்த மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகைச் சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,465-க்கு விற்பனையாகிறது. இதன் அடிப்படையில் ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.360 சரிந்து ரூ.91,720-க்கு வர்த்தகமாகிறது.

தங்கம்

நவம்பர் மாதத் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த 16 நாட்களில் தொடர் சரிவைச் கண்டு மொத்தமாக ரூ.15,360 வரை குறைந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் பொருளாதாரச் சூழல்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றங்கள் மற்றும் வட்டி விகிதக் கொள்கைகள் ஆகியவை உள்நாட்டு நகைச் சந்தையிலும் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன.

தங்கம் விலையில் சரிவு காணப்பட்ட போதிலும், வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி அதே நிலையில் நீடிக்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் தங்கத்தின்

திருமணங்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் வேளையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் இறங்கி ₹91,720 என்ற அளவில் குறைந்திருப்பது சாமானிய மக்கள் மற்றும் நகைப் பிரியர்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இந்நிலையில், தங்கம் விலை மேலும் குறையும் என்றும் டிசம்பர் முதல் வாரத்திற்குப் பின் மீண்டும் படிப்படியாக உயர தொடங்கும் என்றும், 2027 பிற்பகுதியில் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயரக் கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை தொடர்ந்து குறையும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், தங்களுக்குத் தேவையான நகைகளை இப்போதே முன்பதிவு செய்யவோ அல்லது வாங்கவோ பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகைக் கடைகளிலும் வாடிக்கையாளர்களின் வருகை மெதுவாக உயர்ந்து வருவதாக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.