மாலையில் மீண்டும் குறைந்த தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைவு - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று அறிவித்தது மற்றும் சர்வதேசச் சந்தையில் நிலவும் பணவீக்கச் சூழல் காரணமாக, இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 வரை குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாகச் சரிந்து நகைப் பிரியர்களுக்குப் பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.7,600 வரை விலை குறைந்துள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதனால் ஒரு சவரன் ரூ.1.10 லட்சத்தைக் கடந்து விற்பனையானது. இந்த விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவதைக் தவிர்த்து வந்த நிலையில், மார்ச் 12-ம் தேதி முதல் விலை மெல்லக் குறையத் தொடங்கியது.

அதன்படி, இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 அதிரடியாகக் குறைந்தது. அப்போதே ஒரு சவரன் ரூ.1,03,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மீண்டும் அதிரடியாக விலை குறைந்துள்ளது. மாலையில் மட்டும் சவரனுக்கு ரூ.2,240 சரிந்து, தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,01,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12,670-ஆக உள்ளது.
தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையிலும் சரிவு காணப்பட்டது. இன்று காலையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 வரை குறைந்தது. மாலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் சுமார் ரூ.7,600 வரை குறைந்திருப்பது, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களே இந்தத் திடீர் விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
