மீண்டும் எகிறத் தொடங்கிய தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!
சர்வதேச சந்தையில் நிலவும் தீவிரப் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஜூலை 2ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 வரை அதிரடியாக அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகக் கட்டுக்குள் இருந்த தங்கம் விலை, இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மிகக் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,000 என்ற அளவில் விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,07,200 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ரூ.150 அதிகரித்து, இன்று காலை முதல் ரூ.13,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலையைப் பின்பற்றி, தூய தங்கம் மற்றும் தொழில்துறைப் பயன்பாட்டிற்கான வெள்ளியின் விலையும் இன்று பெருமளவு உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கான 10 கிராம் தூய தங்கத்தின் விலை இன்று ரூ.1,200 வரை உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.250 ஆக விற்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.2,50,000 ஆக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளை விடப் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் மீது தங்களது கவனத்தைத் திருப்பி வருவதே இந்த திடீர் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் திருமண முகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் வேளையில், தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
