வினோதம்... வீட்டிற்குள் புகுந்த பாம்பின் உடலில் சிக்கிய தங்க மோதிரம்!
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்பம் தாளாமல் காடுகளில் உள்ள பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காசர்கோடு மாவட்டம் அடூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த பாம்பு, அங்கு நடந்த ஒரு வினோதமான சம்பவத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அடூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேசை மீது பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த தங்க மோதிரம் ஒன்று அதன் உடலில் சிக்கிக்கொண்டது. பாம்பின் உடலில் மோதிரம் மாட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்த வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அந்தப் பாம்பைப் லாவகமாகப் பிடித்தனர்.
தொடர்ந்து, பாம்பின் உடலில் சிக்கியிருந்த தங்க மோதிரத்தைப் பத்திரமாக அகற்றிய வனத்துறையினர், பின்னர் அந்தப் பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர். வெயில் காரணமாகப் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சமடைவது வழக்கமான ஒன்று என்றாலும், பாம்பின் உடலில் தங்க மோதிரம் சிக்கிய இந்த வினோத சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
