உள்ளாடைக்குள் மறைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்; தமிழக தம்பதி கைது!

 
தங்கம் கடத்தல்

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், அபுதாபியில் இருந்து வந்த விமானப் பயணிகளை ஏர் கஸ்டம்ஸ் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், தங்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தைக் கடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியினர் கச்சிதமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வளைகுடா நாடுகளில் இருந்து கொச்சி விமான நிலையம் வழியாகப் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், வளைகுடா நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

நேற்று வளைகுடா நாடான அபுதாபியில் இருந்து கொச்சி வந்தடைந்த விமானப் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடைமைகளை அதிகாரிகள் தனித்தனியாகச் சோதனை செய்தனர். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரது நடத்தையிலும், அவர்கள் பேசிய விதம் மற்றும் உடல் மொழியிலும் அதிகாரிகளுக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

கடத்தல்

இதனைத் தொடர்ந்து, அந்தத் தம்பதியினரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பெண் அதிகாரிகள் முன்னிலையில் தீவிர உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்கள் செய்திருந்த தந்திரமான கடத்தல் முறை அம்பலமானது. அவர்கள் இருவரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தைப் பசை வடிவில் மிகவும் லாவகமாக மறைத்து வைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தி வரப்பட்ட தங்கப் பசையைப் பிரித்தெடுத்து எடை போட்டதில், அதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த ரூ.2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத் தம்பதியினரை முறைப்படி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சர்வதேசத் தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா, இந்தத் தங்கம் யாரிடம் ஒப்படைப்பதற்காகக் கடத்தி வரப்பட்டது, இதற்குப் பின்னால் இருக்கும் மாஃபியாக்கள் யார் யார் என்பது குறித்துக் கொச்சி சுங்கத்துறை மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.