அட்சய திரிதியையில் அதிரடி... தங்கம் விலை திடீர் குறைப்பு!
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்று அட்சய திரிதியை முன்னிட்டு தங்கம் விலை சற்று குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,14,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை முதல் விலையில் சரிவு காணப்படுகிறது. இந்த விலைக்குறைவு அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு 480 ரூபாய் வரை குறைந்து, ஒரு சவரன் தங்கம் 1,14,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் பழைய விலையிலேயே நீடிக்கிறது.

அட்சய திரிதியை நன்னாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு 14,300 ரூபாயாகக் குறைந்துள்ளதால், நடுத்தர மக்கள் பலரும் ஆர்வத்துடன் நகைக்கடைகளுக்கு நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வாங்கிச் செல்கின்றனர்.
