இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை... சவரன் ரூ.1.12 லட்சத்தை எட்டியது!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை குறைந்து பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளித்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,12,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து, 14,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி விலை குறைந்து, பின்னர் ஏப்ரல் 30-ஆம் தேதி உயர்ந்த தங்கம், நேற்று மீண்டும் சரிவைக் கண்டிருந்தது. ஆனால் இன்று மீண்டும் விலை ஏறுமுகமாகவே உள்ளதால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் நடுத்தர குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் அதிகரித்து, தற்போது 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2,70,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
