தங்கம் இறக்குமதி விதிகளில் மாற்றம்... 100 கிலோ வரை மட்டுமே அனுமதி!
மத்திய அரசு தங்கம் இறக்குமதி தொடர்பான விதிமுறைகளை அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. இதன்படி, 'அட்வான்ஸ் ஆதரைசேஷன்' (Advance Authorisation) திட்டத்தின் கீழ் நகை ஏற்றுமதியாளர்கள் இனி ஒரு உரிமத்திற்கு அதிகபட்சமாக 100 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்ககம் (DGFT) அறிவித்துள்ளது. முன்னதாக இந்தத் திட்டத்தின் கீழ் தங்கம் இறக்குமதி செய்வதற்கு எந்தவித உச்சவரம்பும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்முறையாக விண்ணப்பிக்கும் ஏற்றுமதியாளர்களின் உற்பத்தி நிலையங்களைக் கட்டாயம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முந்தைய இறக்குமதி உரிமத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏற்றுமதி இலக்கில் குறைந்தது 50 சதவீதத்தை நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே அடுத்தகட்ட அனுமதி வழங்கப்படும்.
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை நிலைநிறுத்தவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதியாளர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை தங்களது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறித்த அறிக்கையை பட்டயக் கணக்காளரின் (Chartered Accountant) சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் கட்டுப்பாடுகள் நகை ஏற்றுமதித் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
