சற்றே உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
சர்வதேச சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், டாலர் மதிப்பு சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் உலகளவில் தங்கத்தின் விலையை அதிகம் பாதித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தங்கத்தின் இந்தத் தொடர் விலையேற்றத்தால், சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நடுத்தர குடும்பங்களிடையே பரவலாக நிலவி வருகிறது.

இத்தகைய சூழலில் அமெரிக்க டாலரின் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு மட்டும் இந்த விலை உயர்வு நல்ல லாபத்தைக் கொடுத்து நிம்மதி அளித்துள்ளது. ஆனால் பொதுமக்களுக்கும் நகைப் பிரியர்களுக்கும் கடும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று மே 25 ஆம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 வரை உயர்ந்து, ரூ.1,18,240 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்பட்டு மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,95,000-க்கு விற்பனையாவதால், வெள்ளிப் பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் மட்டும் கடைகளை நோக்கி நிம்மதியுடன் படையெடுத்து வருகின்றனர்.
