பிரசவத்துக்காக மருத்துவமனை சென்ற 25 வயது பெண்... குழந்தை பிறந்த 5 மணி நேரத்தில் தாய் உயிரிழப்பு!
உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் 25 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.கோண்டா மாவட்டம் சரையா நான்ஹூடிஹா கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவரது மனைவி சங்கீதா (25). பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ரகட்கஞ்ச் பஜார் பகுதியில் உள்ள தனியார் பிரசவ மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பிறந்த நிலையில், சுமார் 4 முதல் 5 மணி நேரம் கழித்து சங்கீதா உயிரிழந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு முன்பு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், சங்கீதாவுக்கு ரத்த சோகை இருந்தபோதிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரம் குடும்பத்தினரை அவரை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கீதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோண்டா மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சந்த்லால் படேல், சம்பவம் குறித்து மருத்துவக் குழு மூலம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பிரேதப் பரிசோதனை மற்றும் மருத்துவ விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலேயே உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சிகிச்சையில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பது குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படும்.குழந்தை பிறந்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் குழுவின் விசாரணை அறிக்கைக்குப் பிறகே இந்த சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும்.
