குட் நியூஸ்... கச்சா எண்ணெய் 17% அதிரடி சரிவு - ஒரு பீப்பாய் $95 ஆகக் குறைந்தது.. பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

 
கச்சா எண்ணெய் கச்சா எண்ணெய்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள 2 வார கால தற்காலிகப் போர்நிறுத்தம், உலகளாவிய எரிபொருள் சந்தையில் மிகப்பெரிய நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக எகிறிக்கொண்டிருந்த கச்சா எண்ணெய் விலை, இன்று காலை ஒரே நாளில் அதிரடியாகச் சரிந்துள்ளது.

உலகக் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித இடையூறுமின்றித் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. இதனால் எண்ணெய் விநியோகத்தில் இருந்த முட்டுக்கட்டை நீங்கியது. ஈரான் மீதான தாக்குதல்களை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தது, சந்தையில் நிலவிய நிச்சயமற்ற தன்மையைப் போக்கியுள்ளது.

ஓபெக் கச்சா எண்ணெய் க்ரூட் ஆயில்

ஹார்முஸ் வழித்தடத்தில் தேங்கிக் கிடந்த நூற்றுக்கணக்கான எண்ணெய் டேங்கர்கள் தற்போது சர்வதேச நாடுகளுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.

சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 17 சதவீதம் வரை சரிந்து, ஒரு பீப்பாய் 95 டாலராகக் குறைந்துள்ளது. போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது இது 115 டாலர்களைத் தாண்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்களின் விலைக்குறைப்பு: போர்க் காலச் சூழலைச் சாக்காக வைத்து இந்தியாவில் சில தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருந்தன. தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், அந்நிறுவனங்கள் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஷேர் ஆயில் தொழிற்சாலை எண்ணெய்

இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்களும் சர்வதேச விலைக்கு ஏற்பத் தனது விற்பனை விலையைச் சீரமைக்க வாய்ப்பு உள்ளதால், விரைவில் சாமானிய மக்களுக்குப் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு என்ற இனிப்பான செய்தி கிடைக்கலாம்.

எரிபொருள் விலை குறைந்தால், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு குறையும். இது ஒட்டுமொத்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்.