அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... இனி 3வது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு - தமிழக அரசு உத்தரவு!
தமிழக அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு ஏற்கனவே முதல் இரண்டு பிரசவங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மக்கள் நல்வாழ்வு மற்றும் அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மூன்றாவது பிரசவத்திற்கும் விடுப்பு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள புதிய திருத்தப்பட்ட விதிகளின்படி, மூன்றாவது பிரசவத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களுக்கு (84 நாட்கள்) மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் இந்த விடுப்புக் காலத்தில் அவர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அனுமதிக்கப்படும். அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியில் இருக்கும் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

இதுவரை தமிழக அரசு விதிகளின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், மத்திய அரசின் மகப்பேறு நலச் சட்டம் மற்றும் அண்டை மாநிலங்களின் நடைமுறைகளை ஆய்வு செய்த தமிழக அரசு, பெண் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பைக் கருத்தில் கொண்டு இந்த மூன்றாவது பிரசவத்திற்கான விடுப்புச் சலுகையை நீட்டித்துள்ளது.

முதல் இரண்டு பிரசவங்களுக்கு வழங்கப்படுவது போல ஓராண்டு (12 மாதங்கள்) விடுப்பு இதற்குப் பொருந்தாது. மூன்றாவது பிரசவத்திற்கு மட்டும் அதிகபட்சமாக 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு எடுக்க முடியும் என்பதை ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
