அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்,,, தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.35 லட்சமாக உயர்வு!
அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பணியாளர் கூட்டுறவு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடனுக்கான உச்சவரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியாளர் கூட்டுறவு வங்கிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.லதா இது தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டு அமல்படுத்தியுள்ளார்.

அதிகபட்ச கடன் தொகையான ரூ.35 லட்சம் அல்லது சம்பந்தப்பட்ட உறுப்பினரின் மாத ஊதியத்தைப் போல் 25 மடங்கு - இதில் எது குறைவாக இருக்கிறதோ, அந்தத் தொகையே கடனாக வழங்கப்படும். வழங்கப்படும் மொத்தக் கடன் தொகையில் 5 சதவீதம் பங்குத்தொகையாக பிடித்துக்கொள்ளப்படும்.

இந்தக் கடன் உச்சவரம்பு உயர்வு மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் குடும்பச் செலவுகள், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்குக் கூடுதல் கடன் வசதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
