சென்னை மக்களுக்கு குட் நியூஸ்... ரூ.1 கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து சலுகை!
சென்னையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், பொதுப் போக்குவரத்தைப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையிலும், 'சென்னை ஒன்' மொபைல் செயலி மூலம் வெறும் ரூ. 1 கட்டணத்தில் பயணிக்கும் ஒரு புதிய சிறப்புச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் மூலம் சென்னைவாசிகளின் தினசரி பயணத்தை எளிதாக்க 'ஒரே நகரம், ஒரே செயலி, ஒரே டிக்கெட்' என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சலுகையின் மூலம் சென்னை பயணிகள் மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் ஆகியவற்றில் தங்களின் ஒருமுறை பயணத்திற்கான டிஜிட்டல் டிக்கெட்டை வெறும் 1 ரூபாய்க்குப் பெற்றுக் கொள்ள முடியும்.
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் Chennai One செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செயலியினுள் சென்று உங்களின் பயண இலக்கை தேர்வு செய்ய வேண்டும். கட்டணம் செலுத்தும் போது, செயலியில் குறிப்பிடப்பட்டுள்ள BHIM UPI அல்லது Namma UPI மூலமாகப் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
வெற்றிகரமாக 1 ரூபாய் செலுத்தியவுடன் உங்களுக்கான டிஜிட்டல் QR டிக்கெட் உருவாக்கப்படும். இந்த 1 ரூபாய் சிறப்புச் சலுகையானது 'சென்னை ஒன்' செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கணக்கிற்கு , ஏதேனும் ஒரு போக்குவரத்து முறைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சலுகை வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதல் சலுகைப் பயணத்தை முடித்த பிறகு, அடுத்தடுத்து மேற்கொள்ளும் பயணங்களுக்கு வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும். இருப்பினும், அடுத்தடுத்த டிஜிட்டல் புக்கிங்குகளுக்குப் பயணிகளுக்குச் 'சர்ப்ரைஸ் கேஷ்பேக்' சலுகைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
