குட் நியூஸ்... இனி பிறப்பு முதல் 18 வயது வரை ஒரே தளத்தில் சிகிச்சை - அறிமுகமானது ‘நலம் 2.0’ புதிய திட்டம்!
தமிழகத்தில் குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார விவரங்களையும் ஒரே தளத்தில் பதிவு செய்து கண்காணிக்கும் வகையில் ‘நலம் 2.0’ என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பிரத்யேக இணையதளம் மற்றும் கட்டமைப்பை உருவாக்கத் தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தற்போது அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் பிறந்தது முதல் 18 வயது வரை வழங்கப்படும் பல்வேறு சுகாதார சேவைகளுக்குத் தனித்தனி கோப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘நலம்’ இணையதளத்தில், மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படும் ஒரு குழந்தையைத் தொடர் சிகிச்சை முடியும் வரை முழுமையாகக் கண்காணிக்கும் வசதி இல்லாமல் இருந்தது.

இந்த சிரமங்களைக் களையும் விதமாக, ‘நலம் 2.0’ திட்டத்தின் கீழ் 0 முதல் 18 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், குழந்தைக்கு ஏற்படும் நோய்கள், பரிசோதனை முடிவுகள், அளிக்கப்பட்ட சிகிச்சைகள், தடுப்பூசி விவரங்கள், அங்கன்வாடி சேவைகள் மற்றும் பள்ளிப் பருவ மருத்துவ சிகிச்சைகள் ஆகிய அனைத்தும் ஒரே தளத்தில் பதிவு செய்யப்பட்டுத் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
ஒரு குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர், அந்தப் பதிவு வயது வந்தோருக்கான சுகாதாரக் கோப்புடன் இணைக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் கண்காணிக்கும் பதிவாக மாற்றப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
‘நலம் 2.0’ இணையதளமானது சுகாதாரத் துறை மட்டுமின்றி பள்ளிக் கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய பல்வேறு துறைகளுக்கு இடையே தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒருங்கிணைந்த தளமாகவும் செயல்படும். இதனைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் பிரத்யேக இணையதளம் மற்றும் மொபைல் செயலி உருவாக்கப்பட உள்ளது.
மேல் சிகிச்சைக்கு அல்லது மருத்துவப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு குழந்தை, ஏழு நாட்களுக்குள் மருத்துவமனைக்கு வரத் தவறினால், அதன் பெற்றோர்களுக்கு உடனடியாகத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் இத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘நலம் 1.0’ கீழ் உள்ள ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய கார்யக்ரம், மாவட்ட ஆரம்பக்கட்ட தலையீட்டு மையங்கள்மற்றும் ‘கண்ணொளி காப்போம்’ திட்டங்களுடன், பள்ளி மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான ‘டீன் ஹெல்த்’ மற்றும் ‘அனீமியா டி3’ உள்ளிட்ட சுகாதாரத் திட்டங்களும் மொத்தம் 15 முக்கிய வசதிகளுடன் இந்த ஒரே இணையதளத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.
‘நலம் 2.0’ இணையதளம் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பை 16 வாரங்களுக்குள் உருவாக்கிச் செயல்படுத்தவும், அதனைத் தொடர்ந்து 12 மாதங்களுக்குப் பராமரிக்கவும் தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விவரங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் மருத்துவ உதவிகளை வழங்கவும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் நன்கொடைகளை வெளிப்படைத்தன்மையுடன் ஒருங்கிணைக்கும் வகையில் ‘நலன் டி.என்’ இணையதளமும் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
