குட் நியூஸ்... இனி இண்டர்நெட் கனெக்ஷன் இல்லாமலேயே UPI பணப்பரிவர்த்தனை - NPCI-ன் புதிய ஆஃப்லைன் அம்சம்!
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இணைய வசதி இல்லாத இடங்களிலும் தடையின்றி யுபிஐ மூலம் பணம் செலுத்தும் புதிய ஆஃப்லைன் வசதியைச் சோதித்து வருகிறது.
பொதுவாக யுபிஐ மூலம் பணம் செலுத்த மொபைல் நெட்வொர்க் அல்லது இணைய இணைப்பு அவசியமாகும். சுரங்கப் பாதைகள், விமானங்கள், நெட்வொர்க் கிடைக்காத கிராமப்புறங்கள் மற்றும் நெட்வொர்க் நெரிசல் மிகுந்த இடங்களில் இனி இதன் மூலம் எளிதாகப் பணம் செலுத்த முடியும்.
இந்த அமைப்பில் ஸ்மார்ட்போனை, NFC வசதி கொண்ட விற்பனை முனையத்தில் லேசாகத் தொடுவதன் மூலம் கணப்பொழுதில் பணத்தைச் செலுத்தலாம். இச்சேவை யுபிஐ லைட் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பயனர்கள் இணைய வசதி இருக்கும் போதே, தங்கள் மொபைலில் உள்ள யுபிஐ லைட் வாலட்டில் குறிப்பிட்ட தொகையைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இணைய வசதி இல்லாத இடங்களுக்குச் செல்லும்போது, அந்த வாலட்டில் உள்ள தொகையிலிருந்து NFC வசதி மூலம் PoS கருவியில் Tap செய்து கட்டணத்தைச் செலுத்தலாம். இதற்குக் கூடுதல் இணைய தொடர்போ அல்லது 'UPI PIN' பதிவிட வேண்டிய அவசியமோ இல்லை.
NPCI அமைப்பு, 2026-ஆம் ஆண்டில் முக்கியத் தயாரிப்பாளர்களிடமிருந்து NFC வசதி கொண்ட விற்பனை முனையங்களுக்குச் சான்றளிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வணிகர்கள் இந்த அம்சத்தைப் பெருமளவில் தங்கள் கடைகளில் செயல்படுத்திப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவார்கள்.
