குட் நியூஸ்... நாட்டின் எந்தப் பகுதியிலும் ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் - மத்திய அரசின் எளிய நடைமுறை!
மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் தகுதியுள்ள அட்டைதாரர்கள் உணவு தானியங்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய கார்டு தேவையில்லை: இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பயனாளர்கள் எப்பட்டியலிலும் புதிய குடும்ப அட்டை பெற வேண்டிய அவசியமில்லை. தங்களிடம் உள்ள பழைய குடும்ப அட்டையைப் பயன்படுத்தியே தடையின்றிப் பொருட்களை வாங்கலாம்.

சொந்த ஊரைவிட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்பவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலுள்ள நியாய விலைக் கடைகளிலேயே தங்களது மாதாந்திரப் பொருட்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதியான அட்டைதாரர்கள், தங்களது பழைய குடும்ப அட்டையுடன் கூடிய பயோமெட்ரிக் அல்லது ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைச் சரிபார்த்துத் தங்களின் பங்கீட்டுப் பொருட்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம்.
