குட் நியூஸ்... இனி 28 நாட்களுக்குப் பதிலாக 30 நாட்களுக்கு செல்போன் ரீசார்ஜ் - டிராய் புதிய விதிமுறைகள் வெளியீடு!
தொலைத்தொடர்பு நுகர்வோருக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான புதிய தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுவரை வழங்கி வந்த 28 நாள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களுக்கு மாற்றாக, இனி கட்டாயமாக 30 நாள் செல்லுபடியாகும் திட்டங்களை வழங்க வேண்டும் என்று டிராய் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தின் மூலமாக, இதுவரை ஒரு ஆண்டில் வாடிக்கையாளர்கள் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்த நிலை மாறி, இனி ஆண்டுக்கு 12 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்கும். இது நுகர்வோருக்குக் கூடுதல் செலவையும் சிரமத்தையும் கணிசமாகக் குறைக்கும்.
இணையதள வசதி தேவையில்லாத பயனர்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி மட்டும் கொண்ட பிரத்யேகத் திட்டங்களை அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாதந்தோறும் ஒரே தேதியில் ரீசார்ஜைப் புதுப்பித்துக்கொள்ளும் வசதியை அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும் எனப் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரே நாளில் தங்களது ரீசார்ஜை எளிமையாகத் தொடர முடியும்.
