குட்நியூஸ்... இந்தியாவில் வேலையின்மை விகிதம் 4.9 சதவீதமாகக் குறைவு!

 
வேலையின்மை வேலைவாய்ப்பு

இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த அக்டோபர் மாதத்தில் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் காலமுறைத் தொழிலாளர் படை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம், கடந்த செப்டம்பர் மாதத்தில் 5 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதிவான 5.2 சதவீதத்தை விட 0.3 சதவீதம் குறைவாகும். நகர்ப்புற வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 6.9 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே சமயம் கிராமப்புற வேலையின்மை விகிதம் 4.2 சதவீதமாக எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்

கிராமப்புறங்களில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு மற்றும் பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் செப்டம்பரில் 34.6 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 35 சதவீதமாக உயர்ந்துள்ளது (கிராமப்புறங்களில் 39.5% மற்றும் நகர்ப்புறங்களில் 25.9%).

பெண்களுக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதில் நகர்ப்புறங்களில் 8.7 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 3.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்தத் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 55.7 சதவீதமாகவும், பணிபுரியும் மக்களின் விகிதம் 53 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 475 பேரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.