கூகுள் மேப்பை நம்பி குறுகிய தெருவுக்குள் சென்ற கார்! சிக்கித் தவித்த 4 வாலிபர்கள்
கூகுள் மேப் வழிகாட்டுதலை நம்பி காரில் சென்ற 4 வாலிபர்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய குறுகிய தெருவுக்குள் நுழைந்து சிக்கிக்கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
சுவர்களுக்கு இடையில் சிக்கிய கார்
கேரள மாநிலம் அடூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் நோக்கி 4 வாலிபர்கள் காரில் சென்றனர். வழியில் கூகுள் மேப் வழிகாட்டுதலைப் பின்பற்றி வந்த அவர்கள், மேல்புறம் அருகே செம்மங்காலி பகுதியில் பைக் மட்டுமே செல்லும் அளவுக்கு இருந்த குறுகிய தெருவுக்குள் காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சிறிது தூரம் சென்றதும், தெருவின் இருபுறமும் இருந்த வீடுகளின் சுற்றுச்சுவர்களில் கார் உரசியது. இதனால் முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர முடியாமல் கார் சிக்கிக்கொண்டது. காரில் இருந்தவர்களும் வெளியே வர முடியாமல் தவித்ததாகத் தெரிகிறது.
பொதுமக்கள் உதவியுடன் மீட்பு
காரில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டதை அறிந்த அப்பகுதி மக்கள், ஒன்றிணைந்து காரைத் தள்ளி வெளியே கொண்டுவர உதவினர். தகவலறிந்து குழித்துறை தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு கார் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டது. குறுகிய பாதையில் சுவர்களில் உரசியதால் காரின் இருபுறமும் சேதம் ஏற்பட்டது.
காரில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. வழிகாட்டிச் செயலிகளைப் பயன்படுத்தும்போது சாலையின் அகலம், வாகனம் செல்லக்கூடியதா என்பதையும் கவனித்து ஓட்டுவது அவசியம்.
