நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி வழிப்பறி - 6 வழக்குகள் உள்ள குண்டாஸ் குற்றவாளி கைது!
சென்னை காட்டாங்குளத்தூர் அருகே நள்ளிரவில் ரயில்வே சிக்னலைத் துணியால் மறைத்து, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிற்க வைத்துப் பெண் பயணியிடம் துணிகரமாக வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது ஏற்கனவே குண்டாஸ் சட்டம் உள்ளிட்ட பல கடுமையான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் இரயில் நிலையப் பகுதியில் நேற்று இரவில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குமரேசன் (35) என்பவர், தண்டவாள ஓரத்தில் இருந்த சிக்னல் கம்பத்தில் ஏறி, சிக்னல் விளக்குகளைத் துணியால் மூடி மறைத்துள்ளார்.
திடீரென சிக்னல் சிவப்பு நிறத்திற்கு மாறியதால், சிக்னல் கோளாறு அல்லது ஏதோ ஆபத்து என நினைத்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் ரயிலை நடுவழியில் அவசரமாக நிறுத்தினார்.

ரயில் நின்ற அந்த நள்ளிரவு நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட குமரேசன், உடனடியாக ரயிலின் பெட்டிக்குள் ஏறியுள்ளார். அங்கு ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் பயணி அசுதா என்பவரின் கழுத்தில் இருந்த தங்க நகையைக் கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்துத் தப்பியோடினார்.
பாதிக்கப்பட்ட பயணி மற்றும் சக பயணிகள் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் இரயில்வே போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, தப்பியோடிய குமரேசனை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த தங்க நகையும் பத்திரமாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட குமரேசனை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகின. ஆட்டோ ஓட்டுநரான குமரேசன் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரது தொடர் குற்றச் செயல்கள் காரணமாக ஏற்கனவே இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுச் சிறைக்குச் சென்று வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ரயில்வே சிக்னல் அமைப்பையே துணியால் மறைத்து, ரயிலை நிறுத்தி வழிப்பறி செய்யத் துணிந்த இந்தச் சம்பவம் சென்னை புறநகர்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குமரேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
