நிதி நிறுவனத்தில் தூக்கில் தொங்கிய 20 வயது இளம்பெண்! கொலையா என உறவினர்கள் சந்தேகம்
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 20 வயது இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கோரக்பூரின் ஷாபூர் பகுதியில் செயல்பட்டு வரும் 'சம்யாதி உட்கர்ஷ்டம்' நிதி நிறுவனத்தில் நிங்கி என்ற இளம்பெண் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தனது மகளைத் தேடி நிதி நிறுவனத்திற்குச் சென்ற அவரது தாயார் விமலா தேவி, அங்கு துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் மகளின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, நிங்கியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நிதி நிறுவன இயக்குநர் சூரஜ் யாதவைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
