அரசுப் பேருந்து - லாரி மோதி கோர விபத்து; 4 பேர் பலி; 29 பேர் படுகாயம் - மேற்கு வங்க முதல்வர் இரங்கல்; ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
மேற்கு வங்காளத்தில் நிலவி வரும் கடுமையான மழைப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட குறைவான பார்வைத்திறன்கோளாறால், மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டம் மயனாகுரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 27-ல் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சிக்கி 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 29-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிலிகூரிலிருந்து கூச் பெஹார் நோக்கிப் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற வடவங்காள மாநிலப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான சிஎன்ஜி பேருந்து, இன்று காலை மயனாகுரியின் உல்லாடாபரி ஜோராபாத் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிரெய்லர் லாரியின் பின்புறத்தில், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதியது. மோதிய வேகத்தில் லாரியின் பின்புற இரும்புப் பகுதி பேருந்தின் முன்பக்கத்தை அடியோடு கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்தது. இதனால் பேருந்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர்.
Deeply saddened by the tragic road accident at Ulladabri Jorabadh on NH-27 in Maynaguri today, wherein a truck slammed into a bus carrying ill-fated passengers.
— Suvendu Adhikari (@SuvenduWB) June 21, 2026
My heart goes out to the families who have lost their loved ones in this horrific incident. I offer my deepest…
விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மக்களுடன் இணைந்து மயனாகுரி போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை வெட்டி எடுத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்: இச்சம்பவம் குறித்து ஜல்பாய்குரி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயந்த குமார் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விபத்தில் சிக்கிய 17 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் உட்பட மொத்தம் 32 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஜல்பாய்குரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். படுகாயமடைந்துள்ள மற்றவர்களுக்குத் தேவையான அனைத்து அவசர மருத்துவ உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் வழங்க மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் அவசர நிதியுதவி உடனடியாக வழங்கப்படும் என எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தத் துணை பொது ஆய்வாளர் தலைமையிலான போலீஸ் தனிப்படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
