25 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசு பஸ் டிரைவர்... நெகிழ்ச்சி!

 
vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பேருந்தை சாமர்த்தியமாக கட்டுப்படுத்தி 25 பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடசாமி (59), அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் குடும்பத்துடன் வேலூர் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் வசித்து வந்ததாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

 vellore

வெங்கடசாமி நேற்று காலை பேரணாம்பட்டில் இருந்து 25 பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் செல்லும் அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார். குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் புதிய பைபாஸ் சாலையில் சென்றபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அந்த நிலையிலும் பேருந்தை வேகமாக இயக்காமல், மெதுவாக ஓட்டி சாலையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்திய பின்னர் அவர் மயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆம்புலன்ஸ்

டிரைவர் மயங்கியதை பார்த்த பயணிகள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கடசாமி உயிரிழந்தார்.பேருந்தில் இருந்த பயணிகள், அவர் மாரடைப்பு ஏற்பட்டபோதும் பேருந்தை கட்டுப்பாட்டுடன் ஓட்டி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.