அரசுப் பேருந்து ஓட்டுநருக்குப் பட்டாக்கத்தி வெட்டு... தவெக நிர்வாகி கைது!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தவெக நிர்வாகி ஒருவர் பட்டாக்கத்தியால் தலையில் வெட்டிய கொடூரச் சம்பவம், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துத் துறை ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பியுள்ள இந்த வன்முறைச் சம்பவத்தில், தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சோழவந்தான் பணிமனைக்கு நேற்று இரவு வழக்கம்போலத் திரும்பிப் போய்க் கொண்டிருந்த அரசுப் பேருந்துக்கு, தவெக நிர்வாகியான தனுஷ்கோடி என்பவர் வழிவிடாமல் மறித்து வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த தனுஷ்கோடி தான் மறைத்து வைத்திருந்த பயங்கரமான பட்டாக்கத்தியை எடுத்து, பேருந்து ஓட்டுநர் பிரசாந்தின் தலையில் கொடூரமாக வெட்டிவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஓட்டுநர் பிரசாந்த் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் துணிகரத் தாக்குதலைக் கண்டித்தும், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் சோழவந்தான் பணிமனையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் 55 அரசுப் பேருந்துகள் முற்றிலும் முடக்கப்பட்டதால், காலை நேரத்தில் பணிக்குச் சென்ற பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் கடுமையான அவதிக்குள்ளாயினர்.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து கழக மேலாளர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இதையடுத்து, தனிப்படை அமைத்துத் தேடி வந்த சோழவந்தான் போலீசார், கருப்பட்டி கிராமம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பதுங்கியிருந்த தவெக நிர்வாகி தனுஷ்கோடியை அதிரடியாக வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். கைதான தனுஷ்கோடி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் மீது முன்னதாகக் குண்டர் சட்டம் (Goondas Act) பாய்ந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது
