அரசுத் துறைகளில் இனி மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் - மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதற்கும், மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இனி அனைத்து அரசுத் துறைகளும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக மின்சார கார்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று மத்தியச் செலவினத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்தியச் செலவினத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அரசு அலுவலகங்களின் வாகனக் கொள்முதலில் அதிரடியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்கள் தங்களது பயன்பாட்டில் உள்ள பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மாற்றும் போது, அவற்றுக்குப் பதிலாக மின்சார கார்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.

மின்சார வாகனங்களை வாங்குவதற்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கொள்முதல் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அவசியமான பிற வாகனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை வாங்க விரும்பும் துறைகள், அதற்கான தகுந்த காரணங்களை விளக்கி மத்தியத் துறையிடம் முறையான முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, பசுமை எரிசக்தி மற்றும் மின்சார வாகனப் போக்குவரத்தை அரசுத் துறைகளில் இருந்தே தீவிரப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
