விடுமுறை நாளிலும் அரசுப் பள்ளிகள் இயங்கும்... விஜயதசமி நாளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை - பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை!
அக்டோபர் 20-ம் தேதியன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்நாளில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தலைத் தொடங்கும் மரபைப் பின்பற்றி, அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
விஜயதசமி அன்று அரசு விடுமுறை தினமாக இருப்பினும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்காகத் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் இணைந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அன்றைய தினம் ஒன்றாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, சேர்க்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிதாகச் சேர்க்கப்படும் மாணவர்களின் விவரங்களை உடனுக்குடன் 'எமிஸ்' கல்வித் தகவல் மேலாண்மை வலைதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவப் பாடநூல்களைத் தடையின்றி வழங்குமாறும், திருத்தப்பட்ட விடைத்தாள்களை வழங்கி மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யுமாறும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், விடுமுறை தினங்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ, மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வதோ கண்டிப்பாகக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
