அனைவருக்கும் பொதுவான புதிய ஓய்வூதியத் திட்டம் - மத்திய அரசு தீவிர பரிசீலனை!
இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு தொழிலாளர்களுக்கும் முதியோர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஒரு புதிய உலகளாவிய நெகிழ்வுத்தன்மை கொண்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், இந்த புதிய திட்டம் அரசு, தனியார் மற்றும் முறைசாராத் துறை ஊழியர்கள் எனப் பாகுபாடின்றி அனைத்து குடிமக்களையும் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு பரிசீலித்து வரும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சங்களாக தற்போதைய இபிஎஃப் திட்டங்களைப் போல ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இதற்கு இல்லை. சந்தாதாரர்கள் தங்களிடம் உபரிப் பணம் இருக்கும் போது, தங்களுக்கு விருப்பமான நேரத்தில், விரும்பிய தொகையைச் சேமிப்பாகச் செலுத்திக் கொள்ளலாம்.

இந்த திட்டம் முறைசார் துறையில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமன்றி, தினக்கூலிகள், சுயதொழில் செய்வோர் மற்றும் அமைப்புசாராத் துறை தொழிலாளர்களுக்கும் பொதுவானதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்குவது நிறுவனங்களுடன் பிணைக்கப்படாது. தனிநபர்கள் நேரடியாகவே தங்களது கணக்கில் பணத்தைச் செலுத்த முடியும்.
ஒவ்வொரு சந்தாதாரருக்கும் தனித்துவமான கணக்கு எண் மற்றும் கியூஆர் கோடு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு ஊழியர் வேலை மாறினாலும் அல்லது சுயதொழில் செய்யத் தொடங்கினாலும், அவரது ஓய்வூதியக் கணக்கு எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்படும்.
மத்திய அரசு வட்டாரங்களின்படி, இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள், மத்திய அரசு ஆண்டுதோறும் இபிஎஃப் வைப்புத்தொகைக்கு அறிவிக்கும் வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானம் உறுதி செய்யப்படும்.

இத்திட்டத்தில் இணையும் சந்தாதாரர்கள் தங்களின் 60 வயதை எட்டிய பிறகு, வழக்கமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்கலாம். அதே வேளையில், முதியோர்காலத் தேவைகளுக்காகத் தங்களின் மொத்தச் சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மொத்தத் தொகையாக எடுத்துக் கொள்ளவும், மீதமுள்ள தொகையைத் தொடர் ஓய்வூதியமாகப் பெறவும் மாற்று வழிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
அடல் பென்ஷன் யோஜனா, தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் போன்ற தற்போதைய திட்டங்களுடன் இணையாக, இந்த புதிய உலகளாவிய நெகிழ்வுத்தன்மை கொண்ட ஓய்வூதியத் திட்டமும் இந்தியாவில் சமூகப் பாதுகாப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
