நெல்லை பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை - ஆளுநர் அர்லேகர் பகிரங்க மன்னிப்பு!

 
நெல்லை பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் அதிருப்திகளுக்குப் பொறுப்பேற்று, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மாணவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் நேரில் பட்டம் பெறக் காத்திருந்த 871 மாணவர்களில், வெறும் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் கையால் பட்டம் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள மாணவர்களுக்குப் பல்கலைக்கழக அதிகாரிகளால் பட்டம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் விழாவிலேயே தங்களது பலத்த எதிர்ப்பையும் அதிருப்தியையும் பதிவு செய்தனர்.

ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்

மாணவர்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து, நிலைமையை உணர்ந்த ஆளுநர் அர்லேகர் உடனடியாகத் தலையிட்டுத் திட்டமிட்டபடி 871 மாணவர்களுக்கும் நேரிலேயே பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். பட்டமளிப்பு நிகழ்வு நிறைவடைந்த பின் மாணவர்களிடையே பேசிய ஆளுநர், "இன்று காலை நெல்லைப் பல்கலைக்கழகத்தில் நடந்த எதிர்பாராத சம்பவங்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். ஆளுநர் மாளிகைக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாகவே இந்தத் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டது" என்று விளக்கமளித்தார். ஆளுநரின் இந்தத் உடனடி தலையீடு மற்றும் திறந்த மனதுடனான பேச்சுக்குப் பிறகு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அதிருப்தி தணிந்தது.