சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை.. முழுமையாக வாசிப்பாரா கவர்னர் RV அர்லேக்கர்?! - ‘வந்தே மாதரம்’ சர்ச்சைக்கிடையே எகிறும் எதிர்பார்ப்பு!
முதலமைச்சர்விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணி அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடும் வேளையில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது மரபுவழி உரையை முழுமையாக வாசிப்பாரா அல்லது முந்தைய ஆளுநரைப் போலப் பாதியிலேயே வெளிநடப்பு செய்வாரா என்ற பலத்த விவாதம் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் கடந்த காலங்களில் ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் இடையே நிகழ்ந்த அசாதாரண நிகழ்வுகளே இன்றைய கூட்டத்தின் மீதான உற்றுநோக்கலுக்கு முதன்மைக் காரணமாகும்.
கடந்த திமுக ஆட்சியின் போது, அப்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் சில குறிப்பிட்ட பகுதிகளை (சமூக நீதி, திராவிட மாடல் போன்ற வார்த்தைகள்) வாசிக்காமல் தவிர்த்தார். மேலும், தேசிய கீதம் அவையின் தொடக்கத்திலேயே இசைக்கப்படவில்லை என்று கூறி தொடர்ந்து 3 முறை சட்டசபையிலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்து பெரும் அரசியல் புயலைக் கிளப்பினார்.
அரசு தயாரித்த உரை: தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அரசு, தங்களது புதிய கொள்கைத் திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு அறிவிப்புகள் அடங்கிய உரையைத் தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளது.
ஆளுநர் அர்லேகரின் இன்றைய உரைக்கு முன்னதாக, அண்மையில் கேரளச் சட்டமன்றத்தில் அவர் உரையாற்றிய போது ஏற்பட்ட ஒரு புதிய சர்ச்சை தற்பொழுது தமிழ்நாட்டிலும் எதிரொலித்துள்ளது. கடந்த வாரம் கேரளச் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உரையாற்ற வந்தபோது, ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டது. ஆனால், அது முழுமையாக இசைக்கப்படாததால் ஆளுநர் அர்லேகர் தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார்.
தற்போது தமிழ்நாட்டிலும் மாநில வாழ்த்துப் பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்து' மற்றும் தேசியக் கீதம், வந்தே மாதரம் ஆகியவற்றை முறைப்படுத்துவதில் உள்ள மரபு சார்ந்த வரிசைமுறை குறித்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இன்றைய கூட்டத்தொடரில் ஆளுநர் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார் என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
இந்த அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களிடம் கூட்டத்தொடர் குறித்துப் பேசுகையில், "தமிழ்நாடு சட்டமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் இறையாண்மை மிக்க அவையின் அனைத்து மரபுகளும் இன்றைய கூட்டத்தொடரில் எவ்விதத் தொய்வுமின்றி முறைப்படி 100 சதவீதம் மிகச் சரியாகப் பின்பற்றப்படும். இதில் எவ்விதக் குறைபாடுகளுக்கும் இடம் கிடையாது."
ஆளுநரை நேரில் சந்தித்து, தான் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளதாகவும், அரசுத் தரப்பில் அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, உரை சுமுகமாக வாசிக்கப்பட்டு நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் சபாநாயகர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தவெக அரசு தயாரித்துக் கொடுத்துள்ள கொள்கை உரையில் உள்ள அனைத்துத் தரவுகளையும் ஆளுநர் அர்லேகர் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் வாசிப்பாரா, அல்லது முந்தைய ஆளுநர்களின் வழியில் ஏதேனும் ஒரு புதிய சர்ச்சை வெடிக்குமா என்பது இன்னும் அவை கூடும்போது தெரியவரும்.
