தொழில் முதலீடுகளை ஈர்க்க புதிய தொழில் கொள்கை அறிமுகம் - ஆளுநர் உரை!

 
ஆளுநர் உரை ஆளுநர் உரை

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிய தமிழக சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரின் தொடக்க அமர்வில், ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரையில் புதிய தவெக அரசின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த முக்கிய இலக்குகள் அறிவிக்கப்பட்டன.

பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் விதமாகவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை மேலும் எளிமையாக்கும் விதமாகவும் அரசு எடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் தனது உரையில் விரிவாகக் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டை முதலீட்டாளர்களுக்கு உகந்த முதன்மை மாநிலமாக மாற்றுவதற்குத் தொழில் தொடங்குவதற்கான அரசு அனுமதிகளை விரைந்து வழங்குவது அவசியமாகிறது. இதனை மனதில் கொண்டு, புதிய தவெக அரசு ஒற்றைச் சாளர முறையை (Single Window System) மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்குத் தேவையான பல்வேறு துறை சார்ந்த அனுமதிகளை எவ்வித காலதாமதமுமின்றி ஒரே இடத்தில் விரைவாகப் பெற வழிவகை செய்யப்படும். இதன் மூலம் உலகளாவிய பெருநிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழகத்திற்குப் பெருமளவிலான புதிய தொழில் முதலீடுகளைக் கொண்டு வர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உயர்த்தி, லட்சக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாட்டிற்கான பிரத்தியேகமான "புதிய தொழில் கொள்கை"  விரைவில் முறைப்படி வெளியிடப்படும் என்று ஆளுநர் அர்லேகர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.

மின்னணு உற்பத்தி, மின்சார வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் நவீன தொழில் துறைகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

2031-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நாட்டின் முன்னோடி மாநிலமாக மாற்ற திட்டமிடப்படும் என ஆளுநர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த புதிய தொழில் கொள்கை மற்றும் ஒற்றைச் சாளர முறை குறித்த அறிவிப்புகள் அமைந்துள்ளதால் தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.