சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - முழு விபரம்!
இந்தியாவில் சர்க்கரை விலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவுப்படி, வரும் செப்டம்பர் 30, 2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கரும்பு விளைச்சல் எதிர்பார்த்த அளவை விடக் குறைவாக இருந்ததும், எல் நினோ போன்ற வானிலை மாற்றங்களால் வரும் பருவத்திலும் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதும் இந்தத் தடைக்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.இந்த ஏற்றுமதித் தடையானது கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை எனசர்க்கரையின் அனைத்து முக்கிய வகைகளுக்கும் பொருந்தும்.

இந்தத் தடையிலிருந்து சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்: இந்த நாடுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் CXL மற்றும் TRQ ஒதுக்கீடுகளின் கீழ் சர்க்கரை ஏற்றுமதி செய்ய எந்தத் தடையுமில்லை.
நட்பு நாடுகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் விடுக்கும் வேண்டுகோளின் அடிப்படையில் அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் ஏற்றுமதி அனுமதிக்கப்படும்.

சர்க்கரை ஆலைகளிடம் தற்போதுள்ள இருப்பு மற்றும் உள்நாட்டுத் நுகர்வு ஆகியவற்றைச் சீராகப் பராமரிக்க இந்த முடிவு உதவும். இதன் மூலம் சில்லறை விற்பனை சந்தையில் சர்க்கரை விலை உயர்வதைத் தடுக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது. இருப்பினும், உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியா ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதால், சர்வதேசச் சந்தையில் சர்க்கரை விலை உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
பொதுமக்களின் அன்றாடத் தேவையான சர்க்கரையின் விலை எகிறாமல் இருக்க அரசு எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, இல்லத்தரசிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சர்க்கரை ஆலைகளின் இருப்பு நிலவரத்தைப் பொறுத்து இந்த உத்தரவில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
