மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மோதி கோர விபத்து; 3 பெண்கள் உயிரிழப்பு!

 
ஆம்புலன்ஸ் விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சாலையில் திடீரென மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன் மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பையனூர் - மாமல்லபுரம் சாலையில் இன்று பயணிகள் சென்ற வேன் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே மாடு ஒன்று ஓடி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வேன் ஓட்டுநர் மாட்டின் மீது மோதாமல் இருக்க வாகனத்தைத் திருப்ப முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து

வேன் கவிழ்ந்து விழுந்த அடுத்த சில வினாடிகளிலேயே, அதே சாலையில் பின்னால் அதிவேகமாக வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, எதிர்பாராதவிதமாகச் சாலையில் கவிழ்ந்து கிடந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் வேனில் பயணித்த 3 பெண்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேன் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாமல்லபுரம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்த 20 பேரையும் உடனடியாக மீட்டுச் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 3 பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து காரணமாக மாமல்லபுரம் சாலையில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.