பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து; தந்தையும் மகளும் பலியான துயரம்!

 
அரசு பேருந்து விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தந்தையும் அவரது மகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (47). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவரது மகள் மதுமிதா (21), அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர்களின் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்று திருத்தணியில் நடைபெற உள்ள நிலையில், சுரேஷ் பாபு தனது மகள் மதுமிதாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சித்தூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுரேஷ் பாபுவும், மதுமிதாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சோளிங்கர் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற வழியில் தந்தையும் மகளும் விபத்தில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.