மாமல்லபுரத்தில் 74 ஏக்கர் புதிய வளாக திட்டம் ரத்து - தவெக அரசு நடவடிக்கை!
மாமல்லபுரத்தில் 74 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவிருந்த 'தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வுகள் நிறுவன' புதிய வளாகத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் டெண்டரைத் தவெக அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
மாமல்லபுரத்தில் முன்மொழியப்பட்ட இந்த புதிய வளாகத் திட்டத்திற்காக முந்தைய ஆட்சியின் இறுதி மாதங்களில் தொழில்நுட்ப மற்றும் நிதி ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, மிகக் குறைந்த ஏலத்தொகையை வழங்கிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இறுதி ஆணை வழங்குவது மட்டுமே நிலுவையில் இருந்தது.

இதற்கிடையே, தவெக அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆட்சியின் கடைசி ஆறு மாத காலத்தில் இறுதி செய்யப்பட்ட அனைத்து டெண்டர்களையும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதன் ஒரு பகுதியாகவே இந்த டெண்டரும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் அமையவிருக்கும் இந்தத் திட்டம் முற்றிலும் கைவிடப்படவில்லை என்றும், மாறாக இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தப்பட்ட பசுமைக் கட்டிட வடிவமைப்புடன் மற்றும் அதிநவீன அனைத்து வசதிகளுடன் மாற்றுவதற்காகப் புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க விரைவில் புதிய டெண்டர் கோரப்படும் என நகராட்சி நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
