பொங்கல் இலவச வேட்டி, சேலை - நெசவாளர்களுக்குக் கூலி உயர்த்தி அரசாணை வெளியீடு!

 
நெசவு கைத்தறி அமைச்சர் விஜய பாலாஜி

வரவிருக்கும் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்குக் கூலியை உயர்த்தித் தமிழ்நாடு அரசு புதிய அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

இது குறித்துக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பேசுகையில், "பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கான கூலியை உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில், நெசவாளர்களின் கருத்துகளை நேரில் கேட்டறிந்த முதல்வர், உடனடியாகக் கூலி உயர்வை வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

இலவச வேஷ்டி சேலை

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையின்படி, புதிய ரக பெடல்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்குக் கூலி உயர்த்தப்பட்டுள்ளது: பெடல்தறி சேலை ஒன்றுக்கு ₹125.72 எனவும், வேட்டி ஒன்றுக்கு ₹49.99 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. விசைத்தறி சேலை ஒன்றுக்கு ₹54.81 எனவும், வேட்டி ஒன்றுக்கு ₹23.34 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கூலி உயர்வு காரணமாக உருவாகும் கூடுதல் செலவினத் தொகையான ₹13.66 கோடியை, 2026-2027-ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் இருந்து செலவிடக் கைத்தறி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலை வேட்டி

நெசவாளர்கள் பொங்கல் பண்டிகையை மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வகையில் இக்கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான நிலுவைத் தொகையும் அரசால் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.