தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கும் ஹை அலர்ட் - வடகிழக்கு பருவமழை எதிரொலியால் சுகாதாரத்துறை உத்தரவு!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடி மற்றும் எச்சரிக்கை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
பருவகால மாற்றங்களால் ஏற்படக்கூடிய மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையான தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை எந்தவிதத் தடங்கலுமின்றி முழுமையாக இயங்க வேண்டும்.

மின்சாரம் தடைபடும் பட்சத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய ஜெனரேட்டர்கள் உடனடியாக இயக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் குறைந்தபட்சம் 7 நாட்களுக்குத் தடையின்றி இருப்பு வைக்கப்பட வேண்டும். 108 ஆம்புலன்ஸ்கள் தேவையான எரிபொருள் மற்றும் மருந்துகளுடன் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
பாம்புக்கடி விஷமுறிவு மருந்து, நாய்க்கடி தடுப்பூசி, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் மற்றும் குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட அனைத்து அவசர மருந்துகளும் 7 நாட்களுக்குப் போதுமான அளவுக்கு இருப்பில் இருக்க வேண்டும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட வெள்ளம் மற்றும் புயல் ஆபத்து அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மழைக்கால நோய்களான டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்கத் தனித்தனி கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மூலம் தீவிரக் கிருமிநாசினி மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால்களை உடனுக்குடன் சுத்தம் செய்வதுடன், மின்கசிவு மற்றும் தீ விபங்களைத் தவிர்க்கும் பாதுகாப்பு முறைகளையும், குடிநீர், உணவு மற்றும் கழிவறை வசதிகளையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் நேரடி மேற்பார்வையில் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
