அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று (மார்ச் 7, 2026) அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும் தற்காலிக மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 30,000-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் இந்த அறிவிப்பால் நேரடியாகப் பயன்பெறுவார்கள். பெரும்பாலும் பகுதி நேரமாகப் பணியாற்றும் இவர்களுக்கு, இந்த ஊதிய உயர்வு ஒரு முக்கிய வாழ்வாதார உதவியாக அமையும். சமீபகாலமாகப் பொதுத்துறை மற்றும் சேவைத் துறைகளில் பணியாற்றுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு ஊதிய உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், தற்போது தூய்மைப் பணியாளர்களுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு மற்றும் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
