உதவித்தொகை பெறுவோர் கவனத்திற்கு - அரசு முக்கிய அறிவிப்பு!
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையைப் பெறவிருக்கும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளுடன் உடனடியாக ஆதாரை இணைக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
நடப்பு மாதம் முதல் (செப்டம்பர் 2026) ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆதார் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே இனி உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.

முதியோர், மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண் உதவித்தொகை பெறும் பயனாளிகள் பலரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இவர்களில் இதுவரை தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் மற்றும் என்பிசிஐ (NPCI) மேப்பிங்கை இணைக்காதவர்களின் உதவித்தொகை தற்காலிகமாகத் தடைபட வாய்ப்புள்ளது.
இத்தடையைத் தவிர்க்க விரும்பும் பயனாளிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள சம்மந்தப்பட்ட வங்கிக் கிளைகளை நேரில் அணுகி ஆதார் இணைப்பை உடனடியாக உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இந்தச் செயல்பாட்டில் ஏதேனும் சந்தேகங்களோ அல்லது உதவிகளோ தேவைப்படுவோர், அந்தந்தப் பகுதி தாலுகா அலுவலகங்களில் செயல்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி தாசில்தார்களை நேரில் அணுகிப் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
